ராஜஸ்தானின் ஹெல்த் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்ட இலவச தனிமைப்படுத்தும் மையத்தை, தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், "இது சென்னையில் நான்காவது இலவச தனிமைப்படுத்தும் மையம். சென்னையில் 100 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்தால், பத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே உறுதிசெய்யப்படுகின்றனர்.
சென்னையில் நோய்த்தொற்று குறைந்தது என மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்லக்கூடாது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் சென்னை போன்ற மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
மதுரை, கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் போன்ற அதிக பரவும் மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்திவருகிறோம். இதுவரை சுமார் 28 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் சித்தா மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் கூடிய விரைவில் திறக்கப்படும்" எனத் தெரிவித்தார்.