சென்னை, ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ், மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக , திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ், "பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்து காவல் ஆணையருடன் கலந்துரையாடல் நடந்தது. தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற ஆணைப்படி பதற்றமான சாவடிகளைக் கையாள்வது குறித்து ஆலோசனை நடந்தது.
ஒரு தொகுதியில் 16 பேருக்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரம் தேவைப்படும். சென்னைக்குக் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகின்றன. தற்போது 7,098 வாக்குப் பதிவு எந்திரங்கள், 7,454 விவிபாட் எந்திரங்கள் இருக்கின்றன. 537 விவிபாட் இயந்திரங்களின் செயல்திறன் சோதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மொத்தமுள்ள 7,300 தபால் வாக்குகளில், நேற்றுவரை 1,182 வாக்குகள் பதிவாகியுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. அடுத்த ஒரு வாரம் தீவிரமாக பரப்புரை நடக்கும். எனவே, புகார் பெறும் எண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி 1950, 18004257012 ஆகிய எண்ணில் தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.