சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசியை முன்கள பணியாளர்களுக்கு வழங்குவதை தீவிர படுத்துவதற்கான கூட்டம் பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று (பிப்:12)நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”இதுவரை சென்னையில் 33 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை. முன்கள பணியாளர்களான காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நாளை முதல் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும். சென்னையில் தேவையான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தினமும் 10 ஆயிரம் தடுப்பூசிகளை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ளவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்து அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.