சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களில் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதே போல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் சென்னையில், பல்வேறு சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை சென்னை மாநகராட்சி சார்பில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இன்னும் இரண்டு மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஆக.17) சென்னை ரிப்பன் மாளிகையில், ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
இதையும் படிங்க:பாஜகவுடன் திமுக திரைமறைவில் கூட்டணி.. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தடா ரஹீம் குற்றச்சாட்டு!
இந்த கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியதாவது, "சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் தொடர்புடைய சேவைத்துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மேலாண்மை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மழையினால் ஏற்பட்ட பழைய அனுபவங்களின் அடிப்படையில் அவற்றை எதிர்கொள்கின்ற வகையில் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும். குறிப்பாக, மழைநீர் வடிகால்வாய் இணைப்புப் பணிகளையும் முடித்திட வேண்டும். தற்பொழுது பெய்துவரும் மழையினால் மழைநீர் தேங்கும் இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களில் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய சேவை துறைகளின் தொலைபேசி எண்கள் கொண்ட கையேட்டினை தயார் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு மையங்களில் எப்பொழுதும் பணிபுரிகின்ற வகையில் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், கூடுதல் ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவத் (சுகாதாரம்), ஆர்.லலிதா, இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் (பணிகள்), ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:1989ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்தது இதுதான்... - உண்மையை உடைத்த மூத்த பத்திரிகையாளர்!