சென்னை:சென்னை மாநகராட்சி, திடக்கழிவுகளை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் மூலம் நாள்தோறும் வீடுகளுக்கேச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பெறுவது, முக்கிய பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு சேகரிக்கும் குப்பைகள், லாரிகள் மூலம் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்தினாலான இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 5,400 மெட்ரிக் டன் குப்பைகள் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி சார்பில் ‘குப்பையில்லா பகுதிகள்’ (Litter Free Corridors) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, பிப்ரவரி 11 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் 442 சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல் (பேருந்து நிறுத்தங்கள் அருகில்), சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதிவண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கிலோ மீட்டர் நீள சாலைகள், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “தற்போது சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.