சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையின் கீழ் சென்னை மாநகர எல்லைக்குள் நிகழும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளுக்கான சான்றிதழ்கள் இணையதளத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
உதவி எண் அறிவிப்பு
இந்நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து பொதுமக்கள் தங்களின் புகார்களை 1913 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிறப்பு, இறப்பு பதிவு சட்டப்பிரிவு 8 மற்றும் 9 விதிகள் 2000இன்படி, பிறப்பு, இறப்பு குறித்த தகவல்களை 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பதிவாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் நடைபெறும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் குறித்த விவரங்களை மருத்துவ அலுவலர் அல்லது அம்மருத்துவமனையின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரும், வீடுகளில் நிகழும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளுக்கு குடும்பத் தலைவர் அல்லது அவர்களுடன் வசிக்கும் நெருங்கிய உறவினர்கள் மாநகராட்சிக்கு 21 நாட்களுக்குள் கட்டாயமாகத் தெரியப்படுத்த வேண்டும்.
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க இணையதளம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். குழந்தை பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உறுதிமொழி அளித்து குழந்தையின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
’விண்ணப்பங்கள் எதுவும் நிலுவையில் இல்லை’
பெற்றோர் பெயர், குடும்பப் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற எழுத்துப் பிழைகள் திருத்தம் செய்ய பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969க்கு உள்பட்டு உரிய ஆவணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறையில் நேற்று முன் தினம் (செப்.01) வரை 30 நாட்களுக்கு மேலாக பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், “பிறப்பு சான்றிதழில் விவரம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் 413 விண்ணப்பங்கள், இறப்பு சான்றிதழில் 316 விண்ணப்பங்கள், பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க 279 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இந்த நிலுவையில் உள்ள சான்றிதழ்களும் ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்” என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மத்திய அரசை மகிழ்வித்த ஜிஎஸ்டி வரி வசூல்