சென்னை: பண்டிகை விடுமுறை நாள்களில் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால் கரோனா தொற்று மேலும் பரவக் கூடும்.
ஆகையால் வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
கண்காணிப்புப் பணிகள் தீவிரம்
விடுமுறை நாள்களில் மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், மகளிருக்கான மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் (ராயபுரம், அண்ணாநகர், கோடம்பாக்கம்), தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும். கரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறை நாள்களான அக்டோபர் 14, 15, 16, 17 ஆகிய தினங்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி, காவல் துறையின் சார்பில் மேலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் மே மாதம் 2021 முதல் அக்டோபர் 12 வரை கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 9,554 நிறுவனங்களிடமிருந்தும், 90 ஆயிரத்து 226 தனிநபர்களிடமிருந்து நான்கு கோடியே 78 லட்சத்து 30 ஆயிரத்து 990 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆயுத பூஜை: பூ வரத்து அதிகம்!