சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் இணைப்பு மாநகராட்சியிடமும் கழிவு நீர் இணைப்பு மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடமும் உள்ளன. சில குடியிருப்புகளில் செப்டிக் டேங்க் உள்ளிட்ட கழிவு நீரை மழைநீர் வடிகாலுடன் இணைத்து விடுகின்றனர். இதனால் மழை நீர் வடிகால்வாய் பாதைகளில் தேவையற்ற அடைப்பு ஏற்படுவதோடு, வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதற்கும் வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. மேலும் வடிகால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சிக்கலானதாக மாறிவிடுகிறது. மேலும் இந்த கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மாறாக முறையாக கழிவு நீர் கால்வாய்களில் இணைப்பதால் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக திட்டமிடப்பட்ட பணிகளுக்கு அனுப்பப்படும்.
அபராதம்..! எச்சரிக்கை: கோடையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள சென்னை மாநகராட்சி, முறைகேடாக மழைநீர் வடிகால்வாய்களில் இணைக்கப்பட்டுள்ள கழிவு நீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. சாதாரண கட்டிடங்கள், சிறப்பு கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வகைகளாக பிரிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 2 லட்ச ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
முறையான இணைப்பை பெறுங்கள்: ஏற்கெனவே மழை நீர் வடிகாலில் கழிவு நீர் இணைப்பு கொடுத்திருப்பவர்கள் முறையான இணைப்பு பெற விரும்பினால், மாநகராட்சியை அணுகி முறையான விண்ணப்பம் மற்றும் கட்டணம் வழங்கி கழிவு நீர் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அபராதம் செலுத்த நேரிடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அவர்கள் வசிக்கும் பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை எனில். கட்டடத்தில் முறையான கழிவு நீர்த் தொட்டி (செப்டிக் டேங்க்) நிறுவப்பட வேண்டும்.