கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானப் பயணிகளுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது. கரோனா பரவல் தொற்று படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை தளா்த்தப்பட்டது. கடந்த அக்டோபா் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அந்தந்த நாடுகளில் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு, கரோனா பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்தால், சென்னை விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை கிடையாது என்ற விதிமுறையை சுகாதாரத்துறையினா் அமல்படுத்தினா்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது.
மேலும், வெளிநாடுகளில் உருமாறிய கரோனா தொற்றுப் பரவலும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் கரோனா மருத்துவப் பரிசோதனை சான்றிதழ்களில் போலி சான்றிதழ்களும் வருவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (பிப்.23) காலையில் இருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.