திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2ஆம் தேதி அன்று மர்மமான முறையில் சுவற்றை துளையிட்டு நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்து, காவல்துறையினர் திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஒன்பது தனிப்படை அமைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு சுரேஷ் திருச்சி சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்தக்கொள்ளை சம்பவத்தில் காட்ஃபாதராக விளங்கிய முருகன் இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகன் சரணடைந்த நிலையில் அவரை 6 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கியக்குற்றவாளியான முருகன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் திருச்சி மாநகர காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி குற்றவாளி முருகன் 2018ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள 19 வீடுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக நீதிமன்றக் காவலில் முருகனை எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.