சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று(அக். 13) கல்லூரி மாணவி சத்யா ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சதீஷ் என்பவர் தேடப்பட்டுவந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டு, 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து சத்யாவின் தந்தை மாணிக்கம் மது அருந்தியதாக கூறப்படுகிறது. காரில் அமர்ந்த நிலையில் இருந்த மாணிக்கம் திடீரென மயக்கம் அடைந்ததால் உறவினர்கள் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதற்கட்டமாக மகள் உயிரிழந்ததால் சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் தந்தை தற்கொலை: பின்னர் மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், மதுவில் விஷம் ஊற்றி குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் விசாரணையில் மாணிக்கம் மதுவில் மயில் துத்தம் எனும் கொடிய விஷயத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இது குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மகள் சத்யா வைக்கப்பட்ட பிரேதப்பரிசோதனை அறையிலேயே, தந்தை மாணிக்கத்தின் உடலும் பிரேதப்பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மாணவியின் தாயாரும் பெண் தலைமைக்காவலருமான ராமலட்சுமி புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.