சென்னை:ஆயிரம் விளக்கு ஆண்டர்சன் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் சார்பில் புதிதாக காவலர் குடியிருப்பு கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 186 கோடியே 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 1,036 குடியிருப்புகளை கட்டுவதற்காக கடந்த 2015 ஆண்டு ஈரோட்டை சேர்ந்த ஆர்.சி.சி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு அந்நிறுவனம் 95% கட்டுமான பணிகளை முடித்தது.
அதன்பின்பு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வண்ணம் பூசல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் குடியிருப்பை திறந்து வைத்தார். இந்த குடியிருப்பில் ஏராளமான காவலர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவலர் குடியிருப்பில் சுவர் பூச்சு பெயர்ந்து விழுவதாகவும், கைவைத்தால் உதிர்ந்து கொட்டுவது போன்ற வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. கடந்த அதிமுக ஆட்சியில் புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு, தரமில்லாமல் கட்டியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பும் தரமில்லாமல் கட்டபட்டுள்ளதாக புகார் எழுந்தது.