தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! - Chennai CM press meet

சென்னை: மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Chennai CM press meet
Chennai CM press meet

By

Published : Jul 8, 2020, 9:28 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிண்டி கிங் நோய்த் தடுப்பு, மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு கரோனா மருத்துவமனையைத் திறந்து வைத்து பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்காக பல்வேறு மருத்துவமனைகள் அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

கேள்வி : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் நோய்த் தொற்று சற்று குறைந்தாலும் கூட, மற்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாவது போல் தோன்றுகிறதே?

பதில்: இது உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற நோய். 210 நாடுகளில் இந்த நோய் பரவியிருக்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மக்கள் தான் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மக்களுடைய முழு ஒத்துழைப்பினால்தான் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை எந்த அளவிற்குப் பின்பற்றுகிறார்களோ அந்த அளவுக்கு இந்த நோய்ப் பரவலைக் குறைக்க முடியும்.

கேள்வி : சமூகப் பரவல் வந்துவிட்டதா?

பதில் : நான் ஏற்கெனவே பலமுறை சமூகப் பரவல் இல்லை என்று தெரிவித்து விட்டேன். நாமெல்லாம் இப்படி இருக்கின்ற இடத்தில் நோய்ப் பரவினால் தான் சமூகப் பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு தொடர்புடையவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து அவர்களுக்குப் பாசிட்டிவ் இருந்தால் சிகிச்சை அளிக்கிறோம்.

அந்த முறையைத் தான் அரசு கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. அரசின் சார்பாக மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கிறோம்.

அதில், அதிக அளவு மக்களை பரிசோதனை செய்த காரணத்தினால், சுமார் 10,000 நபர்களுக்கு நோய்த் தொற்றின் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.

பின்னர் பரிசோதனை செய்து பாசிட்டிவா அல்லது நெகடிவா என்பது கண்டறியப்படும். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு, சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செயல்பட்டதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. நோய்ப் பரவல் குறைக்கப்பட்டு வருகின்றது.

கேள்வி : ஊரடங்கு பலனளித்தும், சென்னையில் ஏன் ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை?

பதில்:வாழ்வாதாரம் என்பது மிகப் பெரிய சவால். ஒரு பக்கம் நோய்ப்பரவலைத் தடுக்க வேண்டும், அதே வேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அதனால், முழுக்க முழுக்க ஊரடங்கையே பிறப்பித்துக் கொண்டிருந்தால், கிட்டத்தட்ட 105 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதையே தொடர்ந்து கொண்டிருந்தால், வாழ்வாதாரத்தில் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு விடும். ஆகவேதான், முடிந்த அளவிற்கு ஊரடங்கின் மூலமாக நோய்ப் பரவலைத் தடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமென்ற நிலையில்தான் அரசாங்கம் இந்த முயற்சி எடுத்து வருகிறது.

அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கின்றது. இந்த ஊரடங்கின் மூலமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் இன்றைக்கு சென்னை மாநகர மக்களும், மதுரை மாநகர மக்களும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, ஊரடங்கு காலத்தில் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மக்களுக்கும் மனமார, உளமார பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு உண்டா?

பதில் : அப்படி வருவதற்கு வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், இது முழுக்க முழுக்க மக்களுடைய கையில்தான் இருக்கிறது. மக்கள் அரசினுடைய வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால், இந்தப் பரவல் நிச்சயமாக குறையும். அரசு ஏற்கனவே, ஊடகம் மற்றும் பத்திரிகைகள் மூலமாக, பேட்டிகள் மூலமாக, தெருத் தெருவாக ஒலிப்பெருக்கியின் மூலமாக, துண்டுப் பிரசுரங்கள் மூலமாக இந்த நோய் எப்படி வருகிறது, இந்த நோயைத் தடுப்பதற்கு என்ன வழி போன்ற விவரங்களை உள்ளடக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மக்கள் விழிப்போடு இருந்தால், அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த நோய்ப் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. நான் ஏற்கெனவே கூறியதைப் போல பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், பொருட்களை வாங்குகின்ற பொழுது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும், வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். தெருக்களில் இருக்கும் பொதுக் கழிப்பறைகள் அரசால் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், மாநகராட்சிப் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகமாக வாழ்கின்ற தெருக்களிலும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அரசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் வருகிறது. பொதுமக்களுடைய முழு ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

கேள்வி: கரோனா வைரஸ் காற்றின் மூலமாகப் பரவுகிறதா?

பதில் – இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. தற்போது உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் ஆகியவை கொடுக்கின்ற வழிமுறைகளின்படி வெளியே சென்றால் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். அப்படி முகக்கவசம் அணிந்தால் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

நான் ஏற்கெனவே அறிவித்தபடி, அதை எல்லாம் கடைப்பிடித்தால் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். அதுதான் தற்போது இருக்கும் நிலை. மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடித்து, அதையும் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் நிர்வாகத்தினர் வெளியிட்டால், அதையும் கடைப்பிடித்து நோய்ப் பரவலைத் தடுப்பது தான் அரசினுடைய முதன்மையான கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இந்த மருத்துவமனை இன்றைக்கு மிகச் சிறப்பாக கரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு உள்ளது. ஆக்ஸிஜன், வென்டிலெட்டர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. எந்தவித காலதாமதமும் இன்றி உயிரிழப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவமனை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஒரு சிறந்த மருத்துவமனையாக நாங்கள் இதைக் கருதுகிறோம். மக்கள் உயிர் தான் முக்கியம். அந்த உயிரைக் காப்பதற்கு அரசு முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ABOUT THE AUTHOR

...view details