சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் போல டிக்கெட் கவுன்டர் அருகே நின்றபடி ரயிலில் ஏறும் பயணிகளிடம் டிக்கெட்டு பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மேலும், ரயில் டிக்கெட் இல்லாதவர்களிடம், அவரிடம் இருந்த பயணச் சீட்டுகளை விற்று பணம் வசூலித்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்
இதனையடுத்து டிக்கெட் கவுன்டர் அருகே புறநகர் ரயில் டிக்கெட் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த நபரை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரனையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். அப்போது அவரது மேல் சந்தேகம் அடைந்து, அவரை தீவிரமாக விசாரத்ததில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட கிஷோர் (42) என்பதும், புறநகர் ரயில் டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக வடமாநில நபர்களையே குறிவைத்து மாதம் ரூபாய். 30 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து வெங்கட கிஷோர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு, ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திமுக அமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விவகாரம்:திருச்சியை சேர்ந்த நபர் ஒருவர் அவரது குழந்தைக்கு உதவி தேவை படுவதால் திமுக அமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று(அக்.19) இரவு தொலைபேசி மூலம் பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அமைச்சர் கே.என்.நேரு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், நேற்று(அக்.19) இரவு மோப்பநாய் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தொலைபேசி எண் மூலம் மிரட்டல் விடுத்த நபரின் விவரங்களை சேகரித்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவரும் திமுகவின் உறுப்பினராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் மணிகண்டன் என்பவருக்கு திருமணம் முடிந்து மனைவி உயிரிழந்த நிலையில், ஓரு குழந்தை உள்ளதாகவும் இரு சிறுநீரக பிரச்சினை குறித்து திமுகவினர் பொருப்பாளர்களிடம் பல முறை உதவி கேட்டும் மதிக்காமல் போனதால், இந்த முறை கவனத்தை ஈர்க்க அச்சுறுத்தல் மிரட்டலாக அமைச்சர் கே என் நேருவின் வீட்டிற்கு பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லியோ திரைப்பட போலி டிக்கெட்: தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் லியோ படத்திற்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து ஒரு டிக்கெட் 1,500 ரூபாய் என்று விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.