தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.41 லட்சம் திருடிய சிஆர்பிஎஃப் வீரர்.. கருக்கா வினோத்துக்கு நீதிமன்ற காவல் வரை சென்னை குற்றச் செய்திகள்! - சைதாப்பேட்டை நீதிமன்றம்

Chennai Crime news: சென்னை ரயில்வே இருப்பு பாதையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் விபரம், 41 லட்சம் திருடிய சிஆர்பிஎஃப் வீரர் உள்ளிட்ட சென்னையில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

சென்னை குற்றச் செய்திகள்
சென்னை குற்றச் செய்திகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 6:22 PM IST

சென்னைரயில்வே இருப்பு பாதையில் நடந்த குற்றங்கள் விபரம்:சென்னை ரயில்வே இருப்புப் பாதையில்கடந்த 10 மாதங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், சென்னை இருப்புப் பாதை காவல் மாவட்டம் 4 உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அதில் 23 காவல் நிலையங்கள், நான்கு புறக்காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை இருப்பு பாதை காவல் மாவட்டம் உட்பட்ட பகுதிகளில் புறநகர் ரயில் மற்றும் விரைவு ரயிலில் நாள்தோறும் சுமார் 12 லட்சம் பயணிகள் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து மாதங்களில் சென்னை மற்றும் திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகளில் 372 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சம்பந்தப்பட்ட 376 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

41 லட்சம் திருடிய முன்னாள் சி ஆர் பி எஃப் வீரர் கைது:சென்னை ஹாரிங்டன் சாலையை சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் ஜாக்கப் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் ஸ்கிராப் பொருட்களை குத்தகைக்கு எடுத்து வந்த சக்திவேல் என்ற முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் 41 லட்சம் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தனது தொழிலில் நஷ்டம் அடைந்ததால் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வங்கி உதவி மேலாளர் வீட்டில் கொள்ளை:சென்னை கோடம்பாக்கம், முருகேசன் தெருவில் பிரவீன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிரவீன் தனது குடும்பத்துடன் கடந்த 27ஆம் தேதி சுற்றுலா சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பிரவீன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் லாக்கர் உடைக்கப்பட்டு 22 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பிரவீன் அசோக் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கருக்கா வினோத்திற்கு நவம்பர் 15 வரை நீதிமன்ற காவல்:கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 25ஆம் தேதி மாலை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் கருக்கா வினோத்தை கிண்டி போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நீட் தேர்வு விலக்கு வேண்டுமென்றும், தமிழ்நாடு கவர்னர் மாற்றப்பட வேண்டும் எனவும், எந்த அமைப்பினருடனும் தனக்கு தொடர்பு இல்லை எனவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வினோத்தின் மூன்று நாள் காவல் முடிந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வினோத்தை மீண்டும் ஆதார்படுத்தினர். இதையடுத்து நவம்பர் 15ஆம் தேதி வரை கறுக்கா வினோத்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: "தமிழக அரசின் மீதான அவநம்பிக்கையை மறைக்க எடுத்துள்ள அஸ்திரம்.. ஆளுநர் எதிர்ப்பு" - அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details