தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

500 ரூபாயை வழிமறித்து பறித்த 5 பேர் கைது முதல் ஏடிஎம் கொள்ளை முயற்சி வரை! - சென்னையில் ரவுடி கடத்தல்

Chennai Crime news: சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல், ஏடிஎம் கொள்ளை முயற்சி, பிரபல ரவுடி கடத்தல் உள்ளிட்ட சென்னையில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:12 AM IST

சென்னை:தியாகராய நகரில், சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று (அக்.28) இரவு சில மர்ம நபர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலக வளாகத்தில் கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி, கூச்சலிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனின் ஓட்டுநர், காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர். மேலும் இந்த தாக்குதல் அரசியல் ரீதியாகவா இல்லை தனிநபருக்கான தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளை முயற்சி: நந்தனம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலக கட்டடத்தின் தரைத்தளத்தில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்கள் 2 பேர், பணம் எடுப்பதுபோல் உள்ளே நுழைந்து, திடீரென மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவலாளி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ரவுடியை காரில் கடத்திய ரவுடிகள்:அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் அருண் (23). இவர் மீது அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஒரு போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அயனாவரம் விநாயகர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காரில் வந்த மர்ம கும்பல், இவரை கடத்திச் சென்று கத்தியால் வெட்டி, பிறகு கீழே இறக்கி விட்டுச் சென்றுள்ளது. பின்னர், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில், அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், ஆவடி குமரன் நகரைச் சேர்ந்த மகேஷ் என்ற மண்ட மகேஷ் (27), அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற விக்னேஷ் (23), அயனாவரம் பி.இ கோயில் தெருவைச் சேர்ந்த ஆலன் ஜோஸ்வா (23), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மோகன் (24), அயனாவரம் பகுதியைச் சேர்ந்த யஸ்வந்த் (23) ஆகிய 5 பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

பின்பு விசாரணையில், ஏற்கனவே அருண் மீது உள்ள முன்பகையின் காரணமாக இந்த சம்பவத்தை செய்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 5 பேரையும் நேற்று கைது செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல்:புரசைவாக்கத்தில் நாகவல்லி (36) மற்றும் நந்தினி (30) ஆகிய இருவரும் இரவு 10 மணியளவில் ஓட்டேரி பிரிக்கிளின் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த 5 பேர் நாகவல்லி மற்றும் நந்தினி ஆகியோரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

உடனே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், தலைமை செயலக காலனி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். இதில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜனத் என்ற ஜப்பான் (25), சதீஷ்குமார் என்ற கஜா (20), புரசைவாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (20), விக்னேஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:மொபைல் செயலி மூலம் ரூ.10 லட்சம் மோசடி முதல் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனை வரை மாநகர குற்றச் செய்திகள்!

ABOUT THE AUTHOR

...view details