தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முத்துவும் 30 திருடர்களும்' காவல்துறை வெளியிட்ட முக்கிய புத்தகம்! - சென்னை காவல்துறை

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்கி பணம் இழந்து தவிப்பதை தடுக்க, "முத்துவும் 30 திருடர்களும்" என்ற பெயரில் சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகம் வெளியிட்ட காவல்துறை
சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகம் வெளியிட்ட காவல்துறை

By

Published : Nov 9, 2022, 1:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சிம் கார்டு துண்டிக்கப்படும் எனக் கூறியும், ஏ.டி.எம் கார்டு செயலிழந்துவிடும் எனக்கூறியும், பல்வேறு லோன் ஆப்(Loan App) செயலிகள் மூலமும் சைபர் மோசடி கும்பல்களால் தொடர் மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சைபர் குற்றங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்களிடையே கொண்டு சென்று, பண மோசடியில் அவர்கள் சிக்காமல் தவிர்க்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் "முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற சைபர் குற்ற மோசடிகள் தொடர்பான புத்தகத்தினை நேற்று வெளியிட்டார். இது குறித்து சென்னை காவல்துறை தெரிவிகையில்,

புத்தகத்தில் உள்ளவை: ”இந்த புத்தகம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் கையாளும் முப்பது வழிமுறைகள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடைமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், எளிய முறையில் புரிந்துகொள்ள ஏதுவாக இப்புத்தகத்தில் அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களின், சைபர் குற்றங்கள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமையும். தமிழ்நாட்டை சைபர் குற்ற விழிப்புணர்வு மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்புத்தகம் சிறந்த பங்காற்றும்” என கூறியுள்ளது.

இப்புத்தகத்தில் URL இணைப்பு மூலமாக மோசடி, மின் கட்டண மோசடி, பான் மற்றும் ஆதார் கே.ஒய்.சி புதுப்பித்தல், கடன் செயலிகள் மூலம் மோசடி, அலுவலர் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி, சிம் கார்டு துண்டிப்பு மோசடி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி, வீடியோ கால் அழைப்பு மூலம் பணப்பறிப்பு மோசடி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு மோசடி, உள்ளிட்ட 30 சைபர் குற்றங்கள் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கொரியர் நிறுவன அலுவலர்போல் பேசி, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து 8.12 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜம்தாரா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேர் மற்றும் 6 சைபர் குற்ற வழக்குகளில் மொத்தம் 11 குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 60 பேரை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ”தற்போது நடக்கக்கூடிய சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி ’முத்துவும் 30 திருடர்களும்’ புத்தகத்தில் இருக்கிறது. புதுவித குற்றங்கள் நடைபெறும் போது, அவை இதில் அப்டேட் செய்யப்படும். சமீபத்தில் சில நல்ல வழக்குகளை மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் சிறப்பாக புலனாய்வு செய்துள்ளனர்.

சமீபகால சைபர் குற்றங்கள்:அதில் பிரபல கொரியர் வலைதளம் போல போலியாக வலைதளம் உருவாக்கி, பொதுமக்கள் அந்நிறுவனத்தின் கஸ்டமர் எண்ணை தேடும் போது இந்த போலியான வலைதளம் மூலமாக தொடர்பு கொண்டு, உதவி செய்வது போல பொதுமக்களுக்கு லிங்க்குகளை அனுப்பி, அவர்களின் வங்கி கணக்கில் இருந்து 8.12 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட ஜம்தாரா சைபர் கொள்ளையர்களான ஷம்சாத் அன்சாரி, இக்பால் அன்சாரி, ஷக்பாஸ் அன்சாரி ஆகிய 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அதே போல சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், 9 இடங்களில் RAFC என்ற பெயரில் போலியான வங்கி நடத்தி பொதுமக்களிடம் மோசடி செய்த சந்திரபோஸ் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் போலியாக அச்சடித்த ஆவணங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட 56.65 லட்ச ரூபாயை முடக்கி உள்ளோம்.

அதே போல மாடலிங் துறையில் வேலை தருவதாக கூறி, புகைப்படத்தை பெற்று பெண்ணிடம் 3 லட்ச ரூபாய் பறித்த வழக்கில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதே போல கடந்த சில மாதங்களில் முக்கியமான 6 வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பாக புலனாய்வு செய்தனர்.

இந்தாண்டில் மட்டும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மொத்தம் 1,320 புகார்கள் வந்துள்ளது. அதில் 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 வெளிமாநில குற்றவாளிகள் உட்பட 47 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 3 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் 6 ஆன்லைன் லோன் ஆப் மோசடி , 5 மின்சார கட்டண மோசடி, 7 பாஸ் ஸ்கேம் மோசடி, 5 கிப்ட் மோசடி உள்ளிட்ட மோசடி புகார்கள் வந்துள்ளது” என தெரிவித்தார்.

பெயர் காரணம்: இந்த புத்தகத்திற்கு ‘முத்துவும் 30 திருடர்களும்’ என பெயர் வைக்க காரணம் என்ன எனக்கேட்ட போது, ”முன்பு ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற அரபியன் நாவலை வைத்து, ரிசர்வ் வங்கி அதே பெயரில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டது.

அதில் இருக்கும் சைபர் குற்றங்கள் தற்போது நடைபெறாமல் இருப்பதால், தற்போது நடைபெறும் புதுவிதமான 30 குற்றங்களை இணைத்துள்ளோம். 40 குற்றங்கள் இல்லையென்பதால் ’முத்துவும் 30 திருடர்களும்’ என பெயர் வைத்தோம்” என அவர் கூறினார்.

இதையும் படிங்க:ஆன்லைன் பணமோசடி; ஆசையை தூண்டிய பெண் தோழி...ஒரு வாரத்தில் 16 லட்சம் இழந்த ஐடி ஊழியர்

ABOUT THE AUTHOR

...view details