ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: கொரட்டூர் அடுத்த அம்பத்தூர் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விடியல் (30). அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் இவர், கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 26) தனது ஆட்டோவில் அவரது வீடு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் விடியலை தாக்கினர். மேலும் அங்கிருந்த கல்லை எடுத்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்தனர். தொடர்ந்து, தப்பி ஓட முயன்ற விடியலை பின்தொடர்ந்து சென்று பின் தலையில் அறிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விடியல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர், விடியலின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை: வேளச்சேரி புதிய மேம்பாலத்தின் கீழ் தினக்கூலிகள் ஏராளமானோர் தினசரி படுத்துறங்குவது வழக்கம், வழக்கம் போல் படுத்துறங்கிய போது குடிபோதையில் டில்லி (50) என்பவருக்கும், அவினாஷ் (22) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது டில்லி, அவினாஷை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ் கத்தியால் டில்லியை தோள்பட்டையில் குத்தி கொலை செய்து விட்டு சாலையில் நின்று கொண்டிருந்தார். அவரை கண்ட பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வேளச்சேரி காவல் துறையினர், உயிரிழந்த டில்லியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்து விட்டு கத்தியுடன் அங்கேயே நின்று கொண்டிருந்த அவினாஷை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவிநாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.