சென்னை: காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15 நாட்களாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கோடம்பாக்கம் பகுதியில் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.
தற்போது 15 நாட்கள் பயிற்சி முடிந்ததால், மாணவி அவரது தந்தை ஞான குருநாதன் உடன் காரைக்குடி செல்வதற்கு திட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மாணவி அடையார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் தற்கொலை முயற்சி காரணம் குறித்து அடையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை:தமிழகத்தில் அரசு ஒப்பந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். இதில் சென்னை, ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சிஎம்கே கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட சில கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள், கார்ப்பரேட் அலுவலகம், உரிமையாளர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் கீழ்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் சார்பில் கூறப்படுகிறது. இதில் வரி ஏய்ப்பு செய்வதற்கான முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத பணம் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.