சென்னை: கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர், திருமுருகன் (45). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவர் காய்கறி வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் போது கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே பின்னால் வந்த கார் ஒன்று இவரது வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் திருமுருகன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஸ்ரீஷிவ் விக்ரம்(18) என்ற இளைஞர் 'ஜாலி ரைடு சென்று வரலாம்' என்று நண்பர்களிடம் நேற்று இரவே தெரிவித்துள்ளார். அப்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையில் ஸ்ரீஷிவ் விக்ரம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும்; இவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்று வீட்டிற்குச் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதாகவும்; மேலும் ஸ்ரீ ஷிவ் விக்ரம் தற்போது LLR எனப்படும் பழகுநர் சான்றிதழ் மட்டுமே வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீஷிவ் விக்ரமுக்கு உள் காயங்கள் இருப்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் பயணித்த அவரது நண்பர்கள் மூன்று பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எம்.கே.பி.நகர்:இதனைத்தொடர்ந்து நேற்று இரவு, சென்னை எம்.கே.பி நகர் சிக்னல் அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் பயணித்த நபர் முறையான ஆவணங்கள் இன்றி 15 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 18ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர். இந்த விசாரணையில் சவுகார்பேட்டை திருப்பலி தெருவைச் சேர்ந்த மகேந்திர சவுத்ரி(25) என்பவர், நகைகளை சவுகார்பேட்டையில் பிரதீப் என்பவருக்குச் சொந்தமான அம்பிகா ஜுவல்லர்ஸ் நகைக் கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட நகைகளை மீட்ட காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.