சென்னை: போக்குவரத்து விபத்துகளைத் தடுப்பதற்காகவும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும், ஸ்டாப் லைன் கடந்து வாகனங்கள் நிறுத்தக்கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதம் என போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு போக்குவரத்து காவல்துறை செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து காவல்துறையின் கடும் நடவடிக்கையினால் கடந்த ஆண்டுகளின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை விட நடப்பு ஆண்டான 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 265 விபத்துக்கள் நடந்திருப்பதும், அவற்றில் 269 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 238 விபத்துகளில் 240 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். நடப்பாண்டான 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 214 விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றுள் 216 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு விபத்து வழக்குகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதைக் காணலாம். 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022ஆம் ஆண்டில் 10.78%-மாக குறைந்துள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டில் உயிரிழப்பு விகிதம் 10%-மாக குறைந்துள்ளது. எனவே, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை இன்றுவரை 19.70% குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததால் விபத்துகள் குறைவாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தவறான பக்கம் வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்ளுதல் போன்றவற்றிக்கு எதிராக சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறை எடுத்து வருகிறது.
தொழில்நுட்ப முன்முயற்சிகளைப் பொறுத்தவரை போக்குவரத்து காவல்துறை 20 ஸ்பீட் ரேடார் அமைப்பு, வாகன இடைமறிப்பு அமைப்பு (Vehicle Interceptor System), ANPR கேமராக்கள் போன்றவற்றைக் கொண்டு வந்தது நடைமுறையில் பயன்படுத்தி வருகிறது.