சென்னை: மேற்கு மாம்பலம் சத்தியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). இவர் வந்தவாசி அருகே உள்ள மேல்மலையனூர் கோயிலுக்கு தரிசனத்திற்காக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் ஆட்டோவில் கோயிலுக்கு சென்று வர திட்டமிட்ட ரம்யா, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தங்கைகள் இருவரை அழைத்துக்கொண்டு நேற்று அதிகாலை கோயிலுக்கு புரப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு மனநிறைவுடன் சென்னைக்கு திரும்பியுள்ளனர். குழந்தைகள் மற்றும் தங்கைகளை ஆட்டோவின் உள்ளே அமரவைத்து விட்டு ஓரமாக அமர்ந்திருந்த ரம்யா, அதிகாலை எழுந்த தூக்க கலக்கத்தில் கண் அசந்து தூங்கியுள்ளார். இந்நிலையில் அந்த ஆட்டோ சென்னை விமான நிலையம் அருகே சென்றபோது நிலை தடுமாறிய ரம்யா தூங்கிக்கோண்டே ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்துள்ளார்.
ஆட்டோவின் பின் சக்கரம் ரம்யாவின் கால் பகுதியில் ஏறி இரங்கியுள்ளது. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் கண் முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவரிடம் கத்திமுனையில் வழிப்பறி!
தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சூணைத். கல்லூரி மாணவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள உணவகத்திற்கு இரவு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். இருச்சக்கர வாகனத்தில் சென்ற அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் வீடு திரும்பியபோது பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை நெருங்கியபோது இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்துபேர் கொண்ட கும்பல் முகமது சூணைத்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்துள்ளனர். பின்னர் கத்தி முனையில் மிரட்டிய மர்ம கும்பல் அவர் அணிந்திருந்த வாட்ச், இரண்டு செல்போன்கள், மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர்.