சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், பொது இடங்களில் கண்காணிப்புக் குறைபாடுகளை கலைந்து, பொது இடங்களில் கூடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென மூத்த நீதிபதியாக இருந்த என்.கிருபாகரன், ஓய்வு பெறுவதற்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதனை ஏற்று அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விசாரித்து வந்தது. அந்த வழக்கு தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு ப்ளீடர் முத்துக்குமார் ஆஜராகி, பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும், பொறியாளர் சுவாதி படுகொலைக்குப் பிறகு, சரியாக சம்பவம் நடந்த ஓராண்டில் 69 சதவீத இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.