சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனித் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மாலா (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு சிறுமி இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்குள் வராததால் பெற்றோர் வெளியே வந்து தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் அந்தப் பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர்.
அப்போது, அருகில் உள்ள வீட்டின் பின்புறம் படுகாயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடந்தார். இதைக் கண்ட காவல் துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.