சென்னை:150 வருட பழமையான டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிறு (பிப்.26) அன்று அமைதியாக காட்சியளித்ததாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் ஒலிபெருக்கியில் தகவல் தெரிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு தெரிவிக்கப்படுகிறது.
ரயில் எண், நடைமேடை எண் போன்ற தகவல்களும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் இதில் குழப்பம் உள்ள மக்களுக்கு உதவியாக, மையங்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பல மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தகவல்கள் தெரிவிக்கும் விதமாக டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பின்பற்றப்படுவதுபோல ரயில் நிலையங்களிலும் ரயிலின் தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நுழைவாயில்களிலும் (எம்டிசி பஸ் நிறுத்தம், வால் டாக்ஸ் சாலை மற்றும் புறநகர் முனையம்) இந்த டிஜிட்டல் திரை வைக்கப்பட்டுள்ளது.