சென்னை: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இளநிலை தொலைத் தொடர்பு துறை அதிகாரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், விற்பனை செய்யப்பட்ட 150 சிம் கார்டு எண்களை ஆராய்ந்ததில் கடந்த அக்டோபர் முதல் சட்டத்திற்கு புறம்பான டெலிகாம் எக்ஸ்சேஞ்சுகள் அமைந்தகரை பகுதியில் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த டெலிகாம் எக்ஸ்சேஞ்சுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், அமைந்தகரை பகுதியில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் 4 சிம்பாக்ஸ்கள், 130 சிம்கார்டுகள், 2 மோடம், 1 லேப்டாப் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வீடு வாடகைக்கு எடுத்து சட்டவிரோத செயலில் ஈட்பட்டது தெரியவந்தது. வீட்டு உரிமையாளர் உதவியுடன் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர்.
ஜாகீர் உசேன் அளித்த தகவலில் சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த சல்மான் ஷெரிப் என்பவரயும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சல்மான் ஷெரிப் சிம்பாக்ஸ் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.