சென்னைதண்டையார்ப்பேட்டையை சேர்ந்த பருப்பு மொத்த வியாபாரியான பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2019ஆம் ஆண்டு பாண்டியராஜன், முருகேசன், ஜெய்கணேஷ், ஹரிஹரண், உமா ஆகிய நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
மேலும், அவர்கள் தமிழ்நாட்டில் இயங்கும் நியாய விலைக்கடை போன்று மத்திய அரசின் பிரதான் மந்திரி யோஜனா என்ற திட்டத்தில் கிஷன் ரேஷன் கடை திட்டமொன்று தொடங்கி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திட்டத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் விளம்பரங்களை தன்னிடம் காண்பித்து நம்ப வைத்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இந்த கிஷன் ரேஷன் கடை திட்டத்தில் டெண்டர் மூலம் பருப்பு வகைகள் மற்றும் பயிர் வகைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசின் திட்டம் என நம்பி 5 கோடி ரூபாய் மதிப்பிலான பருப்பு வகைகள் மற்றும் பயிர் வகைகளை சப்ளை செய்துள்ளார். சப்ளை செய்த பின்பு பல மாதங்கள் ஆகியும் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பருப்பு வியாபாரி விசாரித்தபோது மத்திய அரசில் அப்படி ஒரு திட்டமே இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து பாலாஜி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். இதேபோல மற்றொரு புகாரும் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு வந்துள்ளது. உடனடியாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி ஆவணங்கள் மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மத்திய அரசு திட்டம் எனக்கூறி கிஷான் ரேசன் திட்டத்தை சமூக வலைதளம், பேப்பரில் விளம்பரப்படுத்தி உள்ளனர். மேலும் மத்திய அரசு 1.68 லட்சம் ரேஷன் கடைகள் துவங்க உள்ளதாகவும், சுமார் 65 ஆயிரம் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாக போலியாக பரப்புரை செய்துள்ளனர்.
மேலும் கிஷான் ரேசன் கடை துவங்க 1.5 லட்சம் செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என மோசடி செய்துள்ளனர். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்ட முக்கிய தரகரான பாண்டியராஜனை கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி கைது செய்தனர். பின்பு பாண்டியராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.