சென்னை: மாநில வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் மற்றும் பேப்பர்களை சிலர் வைத்திருப்பதாகவும், சிலர் ஏஜெண்டாக செயல்படுவதாகவும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்த முகமது ரியாஸ் மற்றும் புகாரி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது முக்கிய தரகர் ஒருவரை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்து உள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அகமது அலிகான் (வயது 42) என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், அவர் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வந்தார் என்றும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்ததும், உரிய ஆவணங்கள் இன்றி தகுதியற்ற நபர்களுக்கும் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தது உள்ளிட்ட தகவல்கள் கிடைத்து உள்ளன.
மேலும் பத்தாம் வகுப்பு படித்து முடிக்காத பலரையும் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப போலி பாஸ்போர்ட் தயாரித்தும் கொடுத்து உள்ளனர். பத்தாம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி பெற வேண்டும் என்பது அவசியம். ஆனால் அதனையும் போலியாக சான்றிதழ் தயாரித்து போலி பாஸ்போர்ட் தயார் செய்து உள்ளனர்.
இதன் மூலம் மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பியது அம்பலமாகி உள்ளது. இசிஆர் எனப்படும் குடியேற்ற சான்றிதழை மறைத்து பத்தாம் வகுப்பு தேராதவர்கள் வெளிநாடு சென்றது தெரியவந்து உள்ளது. மேலும் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க youtube மூலமாக பார்த்து போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
15 வருடமாக தரகராக செயல்பட்டு 500க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களைத் தயாரித்ததும் தெரியவந்து உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி, மீண்டும் போலீசாரிடம் சிக்காமல் பாஸ்போர்ட் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையும் படிங்க:Locanto-வில் Call Girl, Call Boy எனக்கூறி பல லட்சம் அபேஸ்; மும்பையில் பதுங்கிய 7 பேரை கோவை சைபர் கிரைம் கைது செய்தது எப்படி?