சென்னை:ஆடிட்டர் வேலை பார்க்கும் போலி மந்திரவாதி, பணத்திற்கு ஆசைப்பட்டு மென்பொறியாளரை மந்திர வித்தைகளைக் காட்டி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. கடவுள் படம் மற்றும் தாய் படத்திலிருந்து திருநீறு கொட்டுவதும், திடீரென எலுமிச்சை பழத்தை மாயமாகக் கொண்டு வருவதும் என வித்தை காட்டி ஏமாற்றியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கையும், மனைவிக்கு தங்க, வைர நகைகளும், மகளை வெளிநாட்டில் படிக்க வைத்ததும் தெரிய வந்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டர்சன் சாலையைச் சேர்ந்த கௌதம் சிவசாமி என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த 2005ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தபோது, உடன்வேலை செய்துவந்த கேரளாவைச் சேர்ந்த ஆடிட்டர் சுப்பிரமணி என்பவர் அறிமுகமானதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் தாங்கள் இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாக பழகியதாகவும் தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு துபாய்க்கு வேலை நிமித்தமாக சென்றதாகவும்; அதன் பின் சுப்பிரமணி கேரளாவிற்குச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். சென்னைக்கு வரும்போது எல்லாம் சுப்பிரமணி தன்னை வந்து சந்தித்து நன்றாகப் பழகியதாகவும் தெரிவித்துள்ளார். தான் மிகுந்த கடவுள் பக்தியுடைய நபர் என்பதைத் தெரிந்துகொண்ட சுப்பிரமணி தன்னை அடிக்கடி கோவில்களுக்கு அழைத்துச்சென்று ஆன்மிக வழிகளில் ஈடுபடுத்தியும், புட்டபர்த்தி சாய்பாபா அவரிடம் நேரடியாக பேசுவதாகக்கூறி தன்னை நம்பவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துச்சென்று இறந்துபோன தன்னுடைய அம்மாவின் ஆன்மா அவரிடம் பேசுவதாகக் கூறியும்; பூஜையறையில் சாமி படத்திலிருந்து விபூதியை விழச்செய்தும், திடீரென்று எலுமிச்சைப் பழத்தை வரவழைத்தும், மந்திர மாயாஜால வித்தைகள் செய்தும் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்ததாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தன்னுடைய அம்மா பல விஷயங்களை பேசுவதாகவும் அவருக்கென்று தனியாக இலை போட்டு சாப்பாடு போட வேண்டும் எனவும்; அவர் கூறிய விஷயங்களைச் செய்ய வேண்டும் எனவும் சுப்பிரமணி வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
தன் அம்மா பேசுவது தனக்கு கேட்கவில்லை எனச் சொல்லும்போது பாவம் செய்தவர்களுக்கு அம்மா பேசுவது கேட்காது, மனதில் சுத்த எண்ணம் இல்லாததால் கேட்கவில்லை எனக் கூறி நம்ப வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, தனது தாய் கூறியதாக பலருக்கு பணம் கொடுக்கும்படியும் செலவு செய்யும்படியும் கூறியதால், அதனை நம்பி பல காரியங்கள் செய்ததாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறாக தன்னிடமிருந்து கடந்த 2015 முதல் 2019- வரையிலான காலத்தில் வங்கிப் பரிவர்த்தனை மற்றும் ரொக்கமாக மொத்தமாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் கூறுவதை எல்லாம் செய்யும்போது, தனது மூன்று வயது மகள் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதாகவும், அடுத்தடுத்து தனது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் இறந்து போனதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் தங்கி இருக்கும் சொகுசு பங்களாவை சுப்பிரமணி தன் பெயரில் எழுதி வைக்குமாறு தாய் கூறியதாகத் தெரிவித்துள்ளார். தன் தாய், தந்தையர் வாழ்ந்த வீட்டை கொடுக்க முடியாது என்று தெரிவித்ததை அடுத்து, சுப்பிரமணி தன்னை மந்திரம், மாந்திரீகம் எனக் கூறி ஏமாற்றியதை உணர்ந்ததாகப் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.