சென்னையை சேர்ந்தராஜேந்திரன் என்பவரிடம் முகப்பேரைச் சேர்ந்தவரும், மும்பையில் வசித்து வருபவருமான பிரதிக்(32) என்பவர் ஆதித்யா பிர்லா நிறுவனத்தில் உள்ள பிரபல உயர்ரக ஆடை கடைகளுக்கு க்ரிஷ் பேஷன் ஸ்டுடியோ என்ற பெயரில் சென்னையில் உரிமம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியதாகக் கூறப்படுகிறது. இதனை நம்பிய ராஜேந்திரன் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு பிரதிக் போலியான கையொப்பம், முத்திரைகள் கொண்ட ஒப்பந்தத்தை ராஜேந்திரனிடம் கொடுத்து நம்ப வைத்துள்ளார். இதற்காக வங்கி பரிவர்த்தனைகள் மூலமாகவும் கையில் ரொக்கமாகவும் சுமார் 2 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு பிரதிக் தனது வேலையை காட்டத்தொடங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தனது பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் பிரதிக் பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த பிரதிக்கை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch) நம்பிக்கை ஆவண மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மும்பையில் வைத்து பிரதிக்கை ஜனவரி 13ஆம் தேதி போலீ கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.