தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சிறுவன் கடத்தல்: 3 பேர் துப்பாக்கி முனையில் கைது! - chennai district news

சென்னை: 16 வயது சிறுவனை கடத்திச் சென்ற மூன்று பேரை 5 மணி நேரத்தில் பீர்க்கங்கரணை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

சிறுவன் கடத்தல்
சிறுவன் கடத்தல்

By

Published : Aug 28, 2020, 7:36 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகேயுள்ள மதனபுரம் சுராஜ் அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் (43), ராஜாகுமாரி (38) தம்பதி. தங்கராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அது மட்டுமின்றி அதே பகுதியில் தேனீர் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவருடைய ஒரே மகனான நவஜீவன் (16) இன்று (ஆக.28) காலை இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் நவஜீவன் அழைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அழைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

சிறுவன் கடத்தல்

இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் நவஜீவன் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு அவரின் நண்பர்கள் யாரும் நவஜீவனை பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

உடனே நவஜீவனின் பெற்றோர்கள் பீர்க்கங்கரணை காவல் நிலையத்துக்குச் சென்று மூன்று மணி நேரமாக தனது மகனை காணவில்லை என புகார் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நவஜீவனை காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மடக்கி கடத்திச் செல்வது பதிவாகியிருந்தது. இதனிடையே அந்த நபர்கள் நவஜீவனின் தந்தை தங்கராஜை தொடர்பு கொண்டு, "உன் மகனை கடத்தி உள்ளோம். 5 லட்சம் பணம் கொடுத்தால் விட்டு விடுவோம்" என கூறியுள்ளனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில் பீர்க்கங்கரணை காவல் துறையினர் மூன்று தனிப்படைகளை அமைத்து சுமார் 18 கிலோ மீட்டர் வரை 80 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிறுவனை கடத்திச் சென்ற கார் மறைமலைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத நபர்களை துப்பாக்கி முனையில் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி செல்லப்பட்ட சிறுவனை ஐந்து மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை காவல் துறையினர் சேலையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நத்தம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (29), விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (18), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் (21) என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: மீட்பு விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்

ABOUT THE AUTHOR

...view details