சென்னையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. இந்தப் புத்தகக் காட்சி வரும் 21ஆம் தேதிவரை 13 நாள்களுக்கு நடைபெறும். ஆண்டுதோறும் புத்தக வாசிப்பு பழக்கத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையிலும் புத்தக விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புத்தகக் காட்சியில் கீழடி- ஈறடி என திருவள்ளுவரை பெருமைப்படுத்தும்விதமாக அவருக்கு மணல் சிற்பமும், கீழடி வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும்வகையில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளன.
இனிவரும் நாள்களில் எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள் கலந்துகொள்ளும் எழுத்தாளர் முற்றம், புதிய புத்தக வெளியீடுகள், சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் திறந்த அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஓவியப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.