புத்தக வாசிப்பாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த சென்னை 44ஆவது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கண்காட்சியில் சுமார் 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
புத்தகம் திற - அறிவை விரிவு செய் கரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரங்குகளுக்கு செல்லும் பாதைகள் ஒருவருக்கொருவர் உரசாமல் செல்வதற்கு ஏதுவாக விசாலமான பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்து நுழைவுவாயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டும், தெர்மல் ஸ்கேனர் கருவிகொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கண்காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர சில பதிப்பாளர்கள் 20 முதல் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குகிறார்கள்.
வரலாறு, இலக்கியம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைப்பதால், கண்காட்சி பயனுள்ளதாக இருப்பதாக புத்தக நேசிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரியார் இன்றும் என்றும்... கரோனா சூழலிலும் இந்த ஆண்டு வாசகர்கள் அதிகளவில் பார்வையிட வருவார்கள் என்றும், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ரூ.20 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை ஆகும் என்றும் 'பபாசி' நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28ஆம் தேதியன்று உலக அறிவியல் தினத்தையொட்டியும், மார்ச் 8ஆம் தேதியன்று மகளிர் தினத்தையொட்டியும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுதவிர, ஒவ்வொரு நாளும் வெளிஅரங்கில் புத்தக வெளியீடுகள், சிறந்த புத்தகங்களின் அறிமுகம், விமர்சனம் ஆகியவை நடைபெறும்.
கண்காட்சிக்கு வந்திருந்த இயக்குநர் ரஞ்சித் ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், "இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் சமூகத்திற்கு தேவையான ஒன்று. புத்தகத்தில் இருந்து உலகத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. புத்தகம் படிப்பதன் மூலமாக நம்மை நாம் அறிந்துகொள்ள முடியும்" என்றார்.
"சில புத்தகங்களை சுவைப்போம்... சிலவற்றை அப்படியே விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்" என்ற பிரான்சிஸ் பேக்கன் சொல்லுக்கு ஏற்ப, புத்தகங்களின் மீதான உங்களின் காதலை வெளிப்படுத்த இந்த புத்தகத் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.