சென்னை:சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஏராளமான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
புத்தகக் கண்காட்சியின் சிறப்புகள்:மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக, மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த புத்தகக் கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். தென்னிந்தியப் புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை, பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பூம்புகார் சார்பில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2000 சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.