சென்னை கொளத்தூர் என்விஎம் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (33). இவர் வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கும்போது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில், வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தைத் திருடும் காட்சி தெரியவந்தது. இந்த காட்சியை வைத்து வில்லிவாக்கம் உதவி ஆணையர் கொண்ட தனிப்படை காவல் துறையினர் மாறுவேடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (மே 24) நண்பகல் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு எதிரில் நின்று இருந்த இருசக்கர வாகனத்தை, இளைஞர் ஒருவர் திருட முயற்சித்துக் கொண்டு இருந்ததைக் கவனித்த, காவல் துறையினர் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து, கைது செய்து வில்லிவாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இருசக்கர வாகன உதிரி பாகங்கள்
அதில், இருசக்கர வாகனத்தைத் திருடியவர் சென்னை, கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பதும்; இவர் வில்லிவாக்கம், கொரட்டூர், அயனாவரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 25 இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.
இவ்வாறு திருடும் இருசக்கர வாகனங்களின் பாகங்களை உருமாற்றி ஓஎல்எக்ஸ் மூலம் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடமிருந்த 13 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:டிஎஸ்பி போல் நடித்து சிகரெட் பாக்கெட்டுகளை அபேஸ் செய்த திருடன்!