சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மாலை பணிமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட மின்சார ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை அப்போது பணியில் இருந்த லோகோ பைலட் பவித்ரன் என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில், திடீரென நிலை தடுமாறிய ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மற்றும் அங்கிருந்த கட்டிடங்களில் மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்திற்கு ரயிலில் பிரேக் பழுதாகி இருந்ததாக லோகோ பைலட் பவித்ரன் கூறினார். எனவே, இந்த விபத்து தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறை, லோகோ பைலட் பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279 படி, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல் மற்றும் ரயில்வே சட்டப்பிரிவுகளான 151- ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல், 154 - ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமான செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில், 5 நபர்கள் கொண்ட குழுவாக செயல்பட்டது. மேலும், இந்த குழுவில் மெக்கானிக்கல், சிக்னல் ஆப்பரேட்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.