தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2.4 லட்சம் ரூபாய் திருடிய சைபர் மோசடி கும்பல் - chennai district news

சென்னை மருத்துவரிடம் நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து 2.4 லட்சம் ரூபாய் திருடிய சைபர் மோசடி கும்பல் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

chennai-bank-fraud-case
chennai-bank-fraud-case

By

Published : Aug 2, 2021, 11:13 AM IST

சென்னை:அண்ணாநகரைச் சேர்ந்தவர் மருத்துவர் சாந்தினி பிரபாகர். இவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”என்னுடைய செல்போன் எண்ணிற்கு கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் பற்றிய முழுத் தகவல் அளிக்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி ஒன்று புதிய எண்ணிலிருந்து வந்தது. அந்தத் தகவல்களைக் கொடுக்காவிட்டால் சிம்கார்டு செயலிழந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அந்தக் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை வாடிக்கையாளர் சேவை மையம் என நம்பி தொடர்புகொண்டு பேசினேன். அப்போது கியூ-பே எனப்படும் செயலி லிங்க் ஒன்றை அனுப்புவதாகவும், அதன்மூலம் 10 ரூபாய் பணப்பரிமாற்றம் செய்தால் போதும் என அந்த எண்ணில் பேசிய நபர் தெரிவித்தார்.

அந்த நபர் பேசிக்கொண்டே இருக்கும்போது, சிம் கார்டு சேவை துண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக கியூபே செயலியைப் பதிவிறக்கம் செய்து, 10 ரூபாய் பணத்தையும் வங்கி மூலம் ஆன்லைனில் அனுப்பினேன்.

செல்போன் ஹேக்

அதன்பிறகு சில நிமிடங்களில் எனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய், 90 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்தது. அதன்பின்னர் எனது செல்போனை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அப்போதுதான் செல்போனை ஹேக் செய்து உள்ளார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனடியாக என்னுடைய வங்கிக் கணக்கு உள்ள எஸ்பிஐ வங்கிக்குத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அருகில் உள்ள லேண்ட்லைன் மூலமாக எஸ்பிஐ வங்கியைத் தொடர்புகொண்டு தெரிவித்தேன்.

தகவல் திருட்டு

வாடிக்கையாளர் மையம் எனத் தொடர்புகொண்ட எண் இணையதளம் மூலமாகப் பேசப்படும் அழைப்பு என்பதும் தெரியவந்தது. ட்ரூ காலர் செயலி மூலம் பேசிய நபர் யார் என்று பார்க்கும்போது வோடோபோன் கே.ஒய்.சி. சர்வீஸ் என்ற பெயரே இருந்தது. கியூ-பே என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து எனது ஆன்லைன் வங்கிக் கணக்கு மூலமாகப் பணம் செலுத்தும்போது, என்னுடைய போனை ஹேக் செய்து முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அனைத்துத் தகவல்களையும் திருடியுள்ளனர்.

நான் எந்தவித ஓடிபி அல்லது கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வங்கிக் கணக்குகள் தொடர்பான எந்தத் தகவலையும் வாடிக்கையாளர் மையம் எனக் கருதி பேசியவரிடம் தெரிவிக்காமலேயே என்னுடைய போனை ஹேக் செய்து இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினர் தெரிவிக்கையில், ”சிம்கார்டு நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்தி வருவதுபோல் தனியார் எண்ணிலிருந்து சிலர் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். குறிப்பாக கே.ஒய்.சி. அப்டேட் செய்ய வேண்டும் இல்லையெனில் சிம்கார்டு செயலிழந்துவிடும் என்ற குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு மோசடியை கும்பல் அரங்கேற்றிவருகின்றது.

குறுஞ்செய்தியை நம்பி ஏமாறுதல்

சமீபகாலமாக அதிகாரப்பூர்வ சிம்கார்டு நிறுவனங்களிலிருந்து வராத குறுஞ்செய்தியை நம்பி பலரும் இதுபோல் ஏமாந்துள்ளனர். குறிப்பாக இந்த மோசடி கும்பல் டீம் வியுவர் (Team viewer) போன்ற பல செயலிகளைப் பயன்படுத்தி பணத்தைச் செலுத்தினால் சிம் கார்டு சேவையைத் தொடர்ந்து பெறலாம் எனக் கூறி ஏமாற்றுகின்றனர்.

இந்தச் செயலிகள் பதிவிறக்கம் செய்யும் நபர்களின் செல்போன்களை ஹேக் செய்து அவர்கள் செல்போனில் உள்ள அனைத்துத் தகவல்களையும் அதே நேரத்தில் அவர்கள் வங்கிக் கணக்கு தொடர்பாக ஆன்லைனில் பேமெண்ட் செய்யும் பொழுதும் முழு தகவல்களையும் அந்த மோசடி கும்பல் திருடிவிடுகின்றது.

இதுபோன்ற மோசடி பல்வேறு சிம்கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் அதிகளவு நடந்துவருகின்றன. குறிப்பாக பிஎஸ்என்எல், வோடபோன் ஆகிய செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : பள்ளி மாணவியுடன் மாயமான இளைஞர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details