தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரில் மிதக்கும் வீடுகள்... பொதுமக்கள் ஆவடியில் அவதி!

சென்னை: நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையில், ஆவடி மாநகராட்சியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ஆவடி
ஆவடி

By

Published : Nov 27, 2020, 12:23 PM IST

வங்க கடலில் உருவான "நிவர்" புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60அடி சாலை, வசந்தம் நகர், சரஸ்வதி நகர், ஸ்ரீசங்கரர் நகர், பெரியார் நகர், புது நகர், ஸ்ரீராம் நகர், பட்டாபிராம் பகுதியான குறிஞ்சிமா நகர், மேற்கு கோபாலபுரம், சித்தேரிக்கரை, திருமுல்லைவாயல் பகுதிகளான சோழம்பேடு சாலை, மணிகண்டபுரம், சோழன் நகர், ஸ்ரீசக்தி நகர், செல்வ விநாயகபுரம், அண்ணனூர் 60அடி சாலை, சிவசக்தி நகர், உள்ளிட்ட இடங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், பருத்திப்பட்டு ஏரி நிறைந்து வழிகிறது. உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் செல்ல முடியாமல் ஆவடி- பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் ஆறாக ஓடுகிறது. அதேபோல், உபரி நீர் கால்வாய் அயப்பாக்கம் ஏரிக்கு சென்றடையும் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் செல்ல முடியாமல் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.

ஆவடியில் நீரில் மிதக்கும் வீடுகள்

இதற்கிடையில், ஆவடி மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் பருத்திப்பட்டு ஏரி, திருநின்றவூர் ஏரி, ஆவடி சுத்திகரிப்பு நிலையம், ஆவடி- பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மேலும், அப்பகுதியிலிருந்து மழைநீரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மழைநீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "ஆவடி மாநகராட்சியில், பருவ மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இங்குள்ள மழைநீர் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் தற்போது மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் வடிகால் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் கிடக்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details