சென்னை:தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலவுகிறது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையானது, நேற்று (நவ.29) இரவு கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளக்காடாக மாறிய சென்னை: நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சென்னையில் குறிப்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மழை நீரானது தேங்கியுள்ளது. இதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி மற்றும் கொரட்டூர் ஆகிய பகுதிகளின் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக, கொரட்டூர் பகுதியில் அதிகளவு மழை நீர் தேங்கியதால், குடியிருப்பு வாசிகள் அப்பகுதியை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிப்காட் பகுதிகளில் மழை நீரானது சூழ்ந்துள்ளது. மேலும், அம்பத்தூர் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், அந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு சில பகுதிகளில் வெள்ள நீரானது சூழ்ந்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், “சென்னையில் 145 இடங்களில் நீர் தேங்கிய நிலையில 68 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் வடிகால்களில் தண்ணீர் உள் வாங்காததால் நீர் தேங்கியுள்ளதே தவிர, வடிகால் பணிகள் தோல்வி என்று கூற முடியாது. மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டால் தேவையான அளவு வடிகால் கட்டியுள்ளோம்.
சென்னையில் எந்த சுரங்கப் பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழை நீர் தேங்கியது தொடர்பாக வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!