சென்னை:இதய வால்வு மாற்று செயல்முறையின்போது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சென்டினல் சாதனத்தை முதன்முதலில் சென்னை அப்போலோ மருத்துவமனை நோயாளிக்கு பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிக்சை மேற்கொண்டுள்ளது.
குறைந்தபட்ச ஊடுருவும் இதய வால்வு செயல்முறையின்போது பக்கவாதத்தால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இந்த தொழில் நுட்பம் பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பம், டிரான்ஸ் கேதீட்டர் பெருநாடி வால்வு பொருத்துதல் (TAVI) செயல்முறையின்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்று கண்டறியப்பட்ட 89 வயதான ஆண் நோயாளிக்கு இந்த சிகிச்சை நடைமுறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஏவிஐ நடைமுறை:இது குறித்து இதய நோய் மருத்துவர் செங்கோட்டுவேலு கூறுகையில், "89 வயதான ஆண் நோயாளிக்கு 2006ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் பெருநாடி வால்வு (Aortic Valve) மாற்றப்பட்டது. அவருக்கு சமீபத்தில் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் கீழ் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பரிசோதித்ததில், அவருக்கு பெருநாடி வால்வு சிதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கல்லீரல் நோய், சிஓபிடி (COPD), நுரையீரல் நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டதால் அவர் மிகவும் ஆபத்துக்கு உள்ளாகக் கூடிய நோயாளியாக இருந்தார். எனவே அவருக்கு அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு டிஏவிஐ (Transcatheter Aortic Valve Implantation - TAVI) நடைமுறை பரிந்துரைக்கப்பட்டது.