சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்புத் திட்டங்கள் துறை சார்பில் 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் கீழ் விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து மறுசீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கம் 32.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கப்பட உள்ளது. அரங்கம் உள்ளே அருங்காட்சியகத்துடன் கூடிய நிர்வாக அலுவலகம் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதோடு முதல் தளத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் நிர்வாக இடமாகவும் மற்றும் கலாச்சார இடமாகும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுக் காலத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நேரு மைதானம் மறு சீரமைக்க நிதி வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரு உள் விளையாட்டு அரங்கில் உள்ள விளக்குகளை மாற்ற 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றும் விளையாட்டு நகரம் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்துள்ளோம் என்றும் விரைவில் ஒரு இடத்தை தேர்வு செய்து பணிகள் துவங்குவோம்" என தெரிவித்தார்.