சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சான்றிதழ் அச்சடிப்பு, மாணவர்களின் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், அக்காலக்கட்டத்தில் பணியாற்றிய துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக சட்டப் பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் பண்ருட்டி வேல்முருகன், பூண்டி கலைவாணன், எஸ்.ஆர்.ராஜா, மாதவரம் சுதர்சனம், ஒய் பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நிதி இழப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.77 கோடி முறைகேடு புகார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை, கடந்த 2016 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் கொள்முதல், மாணவர்களின் பதிவேடுகள் டிஜிட்டல் செய்ததில் 77 கோடி ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
ஊழல் தனி நபர் செய்திருக்க முடியாது என்றும், அப்போதைய துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் டெண்டரில் ஒப்புதல் அளித்துள்ளதாவும் தெரிவித்தார்.
2016-ல் தேர்வு கட்டுப்பட்டு அதிகாரியாக இருந்த ஜி.வி உமா மர்மமான முறையில் இறந்ததாக ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் இயற்கையாக இறந்ததாகவும் கூறுவதாக தெரிவித்த செல்வப்பெருந்தகை, உமா இறப்பதற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்க உள்ளதாக கூறினார்.
10 லட்ச ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் போடும் பொழுது அதை ஓபன் டெண்டராகத்தான் போட முடியும் என்றும், ஆனால் இங்கு தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் அப்போதைய துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாகவும், டிசம்பர் 2 ஆம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் மாலை 3 மணிக்கு அனைத்து ஆவணங்களையும் எடுத்து வந்து மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறினார். இந்த சம்பவத்தில் குற்றவியல் நடைமுறைப்படி விசாரிப்பது தொடர்பாக பின்னர் முடிவு செய்ய உள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறிய செல்வப்பெருந்தகை, அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் தேவைப்பட்டால் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அதேபோல் சிறைத்துறைக்கு வாகனங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடந்து இருப்பதாகவும், 5 விழுக்காடு வாட் வரிக்கு பதிலாக 14 சதவீத வரி செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இதையும் படிங்க:23 பெண்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை...!