தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பணம் பெற்றுக்கொண்டு 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம்" - போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட வழக்கில், சம்மந்தப்பட்ட அமைப்பு இதுவரை 50-க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர்கள் பட்டங்கள் வழங்கியுள்ளதாகவும், சில சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கிவிட்டு மற்றவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி
போலி

By

Published : Mar 12, 2023, 6:57 PM IST

சென்னை:சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து, சினிமா பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது. இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த அமைப்பு விதிமுறைகளுக்குப் புறம்பாக கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்திக் கொண்டது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பட்டங்களை வழங்கிய ஹரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகராஜன் என்கிற குட்டி ராஜாவையும் போலீசார் ஆம்பூர் அருகே கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பத்து விதமான கேள்விகளை கேட்டு விளக்கத்தையும் போலீசார் பெற்றுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதுவரை இந்த அமைப்பின் மூலம் 50-க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர்கள் பட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முக்கியமான நான்கு பிரபலங்களுக்கு இலவசமாக வழங்குவதாகவும், அவர்களை வைத்து நிகழ்ச்சியை விளம்பரம் செய்து மீதமுள்ள பிரபலங்களிடம் பணம் வசூல் செய்து டாக்டர் பட்டம் கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு டாக்டர் பட்டத்திற்கும் 25 ஆயிரம் ரூபாய் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகவும், விருதுகளுக்கு ஏற்றார் போல் பணம் வசூலிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சி நடத்துவதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து, அதில் குறைந்த அளவு தொகையை மட்டும் பயன்படுத்தி நிகழ்ச்சியை நடத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரிஷின் தஞ்சாவூர் ஆடுதுறையில் உள்ள வங்கிக் கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக் கணக்கில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக தெரியவந்துள்ளது.

ஹரிஷ் பெரும்பாலும் டாக்டர் பட்டம் வழங்குவதற்கும், விருதுகள் வழங்குவதற்கும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தேவையான பணத்தை வசூல் செய்ய இந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தியதால், இதில் இதுவரை யார் யார் பணம் கொடுத்து உள்ளார்கள் என்ற பட்டியலை தயாரித்து, அதன்படி எத்தனை பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பணம் கொடுத்து விருது வாங்கும்போது, ஏமாற்றுக்காரர்களும் வருவார்கள்" - அண்ணா பல்கலை. துணைவேந்தர் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details