சென்ன:சென்னை விமான நிலையத்தில் கதிர்வீச்சு அபாயத்தின் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அதை தடுத்து நிறுத்தி, பேராபத்தைத் தடுப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் 5 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய கடற்படை, இந்திய விமான நிலைய ஆணையம், தீயணைப்புத்துறை இணைந்து இந்தப் பயிற்சியை வழங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து ரசாயனம், அமிலங்கள், உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் பெருமளவு கொண்டுவரப்படுகின்றன. அதில் சிறிய கசிவு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, அங்கு உயிரியல், கதிரியக்கம் மற்றும் அணுக்கரு ஆகியவற்றில் இருந்து வெளிப்படும், அபாயகரமான மாசுகள் மற்றும் அச்சுறுத்தல்களால், விமான பயணிகளுக்கோ, விமான சேவைகளுக்கோ பாதிப்பு ஏற்படாத விதத்தில் தடுப்பது குறித்தும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக், இந்திய கடற்படையின் விமானப் பிரிவின் டார்னியர் படை தலைமை அதிகாரி ஆசீஷ் கலான் உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர். அதோடு சென்னை துறைமுக உயர் அதிகாரிகள், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேடுத்தனர். இந்தப் பயிற்சி கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால முதலுதவி சிகிச்சை அளிப்பது, உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் மீட்பது போன்ற பல்வேறு கோணங்களில் வழங்கப்பட்டது.