சென்னை:சென்னைசர்வதேச விமான நிலையம் கடத்தலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் ரூ.262.05 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் தங்கக் கடத்தல் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ.70.12 கோடி மதிப்புடைய 157.75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,144 பேர் கைது செய்யப்பட்டனர். அவா்களில் 20% பெண் கடத்தல்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதை கடத்தலிலும் கொடிகட்டிப்பறக்கும் சென்னை: அதைப்போல் போதை கடத்தல் சென்னை விமான நிலையத்தில் அதிக அளவில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் ரூ.181.51 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக ரூ.170 கோடி மதிப்புடைய 25.44 கிலோ ஹெராயின் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் போதை கடத்தல் வழக்குகள் 41 பதிவாகி உள்ளன. அதில் 12 பேர் கைது செய்யப்பட்டனா். அவர்களில் பெரும்பான்மையோர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள். மற்ற வழக்குகளில் கடத்தல் ஆசாமிகள் இல்லாமல் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டவைகள். எனவே அவைகளில் வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர், அந்த குற்றவாளிகளைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வெளிநாட்டுப்பணம் கடத்தல்: அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப்பணம், கணக்கில் வராத ஹவாலா பணம் கடத்தலும் அதிகமாக நடக்கின்றது. கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் வழக்குகள் 43 பதிவாகி உள்ளன. அதில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து ரூ.10.42 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவைகள் தவிர மின்னணு சாதனப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்கள், நட்சத்திர ஆமைகள், அரியவகை விலங்குகள், பழங்கால சிலைகள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகள் கடத்தலும் அடிக்கடி நடக்கின்றது. அதைப்போல் நடப்பு ஆண்டான 2022ஆம் ஆண்டிலும், கடந்த 5 மாதங்களில் அதிக அளவிலான கடத்தல்கள் சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகின்றது. குறிப்பாக தங்கம், போதைப்பொருள், கரன்சி, வைரக்கற்கள்,அரியவகை உயிரினங்கள் கடத்தல்கள் அதிக அளவில் நடக்கின்றன.
இதில் குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் அதிகமாக உள்ளது. இந்த கடத்தலில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.மேலும் ஆட்கள் இல்லாமல் போலியான முகவரிகளுடன் பாா்சல்கள் வாயிலாகவும் போதைப்பொருட்கள் கடத்தல்கள் நடக்கின்றன.