சென்னை:தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன்(28) என்ற பயணி 2 பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தார். அந்த பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவருடைய பிளாஸ்டிக் குடைகளுக்குள், குரங்கு குட்டிகளான பிக்கி மர்மொசெட் மற்றும் டஸ்கி லீப் வகையைச் சேர்ந்த நான்கு குரங்கு குட்டிகள் இருந்தன. இவைகள் ஆப்பிரிக்க நாட்டு காட்டுப்பகுதிகளில் வசிக்கும் அபூர்வ வகையைச் சேர்ந்தவை. இதை அடுத்து குரங்கு குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், ”குட்டிகளை சர்க்கஸ் கம்பெனிகளில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்திருப்பதாக கூறினார். அதோடு இது மிகவும் அபூர்வமானவை. அதிர்ஷ்டமானவை என கூறப்படும் இந்த வகை குரங்குகளை கோடீஸ்வரர்கள் வாங்க விரும்புவர். அவர்களிடமும் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளேன்” என்று மாறி மாறி பேசியுள்ளார்.
மேலும் இதை போன்ற விலங்குகளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் போது, அதற்கு முறையான ஆவணங்கள், மருத்துவ பரிசோதனை சான்றுகள் போன்றவைகள் இருக்க வேண்டும். அவைகள் எதுவுமே இல்லாததை அடுத்து, சுங்க அதிகாரிகள் அந்த குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்தனர்.