விமானத்தில் ஏற பயணிக்கு அனுமதி மறுப்பு சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.55 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய பாவா மொய்தீன் என்பவர் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரை நிறுத்தி ஆன்லைன் விமான டிக்கெட் மற்றும் அவருடைய ஆதார் கார்டு ஆகியவற்றை வாங்கி பார்த்தனர். அந்த ஆதார் கார்டில் சர்மேஷ் கான் என்ற பெயர் இருந்தது.
ஆனால் விமான டிக்கெட்டில் பாவா மொய்தீன் என்ற பெயர் இருந்துள்ளது. விமான டிக்கெட்டில் ஒரு பெயரும் ஆதார் கார்டில் ஒரு பெயரும் இருந்ததால் அந்த பயணி விமானத்தில் பயணிக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பயணியிடம் இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பயணி நான் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் என்னுடைய விமான ஆன்லைன் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டை வாங்கிப் பார்த்து பரிசோதித்துவிட்டு தான் உள்ளே அனுப்பினர்.
அப்படி இருக்கையில் நீங்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுப்பது ஏன்? என்று கேட்டார். அவர்கள் தவறுதலாக அனுப்பி விட்டார்கள் என்பதற்காக நாங்களும் அதைப்போன்ற தவறை செய்ய முடியாது. விமான டிக்கெட், ஆதார் கார்டு இரண்டிலும் ஒரே பெயர் இருந்தால்தான் பயணம் செய்ய அனுமதிக்க முடியும் என்று உறுதியாக கூறிவிட்டனர்.
இதையடுத்து அந்த பயணி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் பயணியை விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பயணி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
விமான நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி விசாரித்த போது, விமான நிலைய நுழைவு வாசல் கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான டிக்கெட் மற்றும் ஆதார் கார்டு இரண்டிலும் வேறு வேறு பெயர்கள் இருந்ததை கவனிக்காமல், தவறுதலாக உள்ளே அனுப்பிவிட்டது தெரியவந்தது. மேலும் இது தவறு என்பதை அறிந்து, விமான நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இதை போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கவனக்குறைவாக செயல்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஒரு இளைஞரை, விமான டிக்கெட் உள்ளிட்ட எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் அனுப்பி விட்டனர்.
பின்னர் அந்த இளைஞர் சர்வதேச விமான நிலையத்துக்கு சுற்றித்திரிந்து குடியுரிமை அலுவலகத்தில் ஒரு ஊழியரின் செல்போனை திருட முயன்றபோது விமான நிலைய அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இலங்கை இளைஞர் எந்தவித ஆவணமும் இல்லாமல் விமான நிலைய பயணிகள் வரும் கேட் வழியாக உள்ளே வந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி விமான நிலைய அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து விசாரணை நடந்தது.
இதைப்போல் கடந்த காலங்களில் மேலும் சில சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பயணி சர்மேஷ் கான் இவ்வளவு பெரிய பாதுகாப்புடைய சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட்டிலும், ஆதார் அட்டையிலும் பெயர் மாற்றம் இருந்த போதிலும் பாதுகாப்பு அதிகாரிகள் அதை சரியாக பார்க்காமல் தன்னை எப்படி உள்ளே அனுமதித்தார்கள் என வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"5 ஆயிரம் ரூபாய் வீணாகுவது கூட எனக்கு கவலை இல்லை. ஆனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது தான் கவலையாக உள்ளது. தற்போது விமானத்தில் எனது பெயரில் புக் செய்யப்பட்ட இருக்கையில் வேறு யாராவது சென்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் மீது இவர்கள் பழி போடுவார்கள். சென்னை விமான நிலையத்தில் இதுபோன்று கவனக்குறைவாக செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை தீவிரபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்!