சென்னை:சென்னை விமான நிலையத்தில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆறு அடுக்கு கார் பார்க்கிங் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் வாகனங்களுக்கு அதிகப்படியான கட்டண வசூல் மற்றும் பல்வேறு புதிய நடைமுறைகளால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே சென்னை விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் வெளியிலேயே நிறுத்தி நேரத்தை கணக்கிட்டு கட்டண டோக்கன்கள் வழங்க ஆரம்பித்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று, அதனால் வாகன ஓட்டிகளுக்கும், கார் பார்க்கிங் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று(டிச.9) காலை முதல் சென்னை விமான நிலையத்தில் அதிகளவு வாகனங்கள் வந்து கொண்டிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்களும், விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் வாகனங்களும் டோக்கன் பெறுமிடத்தில் நீண்ட நேரம் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோல நீண்ட நேரம் காத்திருப்பதால் சரியான நேரத்தில் விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல், விமானத்தை தவறவிடும் வாய்ப்புள்ளதாகப் பயணிகள் கூறுகின்றனர்.
மாண்டஸ் புயலால் சென்னை விமான நிலையப் பகுதியில் காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், விமானப் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மேலும் அவதிகுள்ளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலால் சென்னை விமான நிலையம் ஸ்தம்பித்து நிற்கிறது. புதிதாக கட்டப்பட்ட கார் பார்க்கிங் பயன்பாட்டிற்கு வந்தும், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பூங்கா மற்றும் மைதானங்கள் மூடல்