சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஒ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததால் அவருடைய சகோதரி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஜெயந்தனை காணவில்லை என புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்மணியை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விசாரணையில் பாக்கியலட்சுமி, அவரது நண்பரான சுந்தர் உடன் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்ததாகவும் பின்னர் உடலை எரித்து விட்டு கோவளத்தை சேர்ந்த சாமியார் வேல்முருகன் உதவியுடன் கோவளம் சுங்கச்சாவடி அருகே உப்பளம் பகுதியில் உள்ள பூமிநாதர் சிவன் கோயில் அருகே குட்டையில் உடல் பாகங்கள் வீசியதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனை தொடர்ந்து 20 நாட்கள் கழித்து மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சிறுசேரி தீயணைப்பு துறையினர் சென்னை அடுத்த கோவளம் சுங்கச்சாவடி அருகே உள்ள உப்பளம் பகுதியில் உள்ள பூமிநாதர் சிவன் கோயில் அருகே உள்ள குட்டையில் உடல் பாகங்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடங்கள் கழித்து தீயணைப்பு துறையினர் குட்டையில் இருந்த இரு பிளாஸ்டிக் கவரை கண்டெடுத்தனர். பின்னர் கரையில் இரு கவர்களையும் ஆய்வாளர் சிவக்குமார் பிரித்து பார்த்ததில் எரிந்து நிலையில் உயிரிழந்த ஜெயந்தன் தலை மற்றும் உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது.
உடல் குட்டையில் போடப்பட்டதை தொடர்ந்து சுமார் 20 நாட்கள் கழித்து நேற்று உடல் பாகங்கள் கண்டெடுத்தனர். கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஜெயந்தன் என உறுதி செய்த பிறகு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீதமுள்ள உடல் பாகங்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய ஊழியர் கொடூர கொலை - உடலை கூறு போட்டு கடற்கரையில் புதைத்த பெண்மணி கைது!