சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஒ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு போய்விட்டுதான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், சில நாட்கள் ஆகியும் ஜெயந்தன் திரும்பி வரவில்லை. அவருடைய சகோதரி ஜெயந்தனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயந்தனை காணவில்லை என்று அவரது சகோதரி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவற்றை வைத்து ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக புதுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(38) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1ஆம் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த பெண் முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
பிறகு போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ஜெயந்தனை புதுக்கோட்டையில் வைத்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக கூறு போட்டு, கட்டைப் பை, சூட்கேஸ் ஆகியவற்றில் எடுத்துச் சென்று, செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்துவிட்டதாக அந்தப் பெண்மணி கூறியுள்ளார். மேலும், தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.